Friday, June 6, 2008



சமீபத்திய இரு நிகழ்வுகள் என் மனதினை நெகிழச் செய்த நிகழ்வுகள்.

முதல் நிகழ்வு:

185 செமீ உயரத்தில் 92 கிலோ எடை கொண்ட ஒரு சின்னக் குழந்தையைக் கண்டிருக்கின்றீர்களா....?

இதென்னடா புதுக் குழப்பமாய் இருக்கின்றதே என எண்ணுகின்றீர்களோ....? இது ஹார்மோன்களின் வேலையோ என எண்ணி வியக்கின்றீர்களா....?

குழப்பம் வேண்டாம். அவர் வேறு யாரோ அல்ல; நம் அசாம் சிவாதான் ....!

அவரின் பிஹெச்டிக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய கதையே இருக்கின்றது.

அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட்டு பிஹெச்டியை விட்டு விலகி விட பலமுறை முயற்சித்தும் முத்தமிழ், நம்பிக்கை குழும உறவுகள் கொடுத்த தன்னம்பிக்கையின் உற்சாகத்திலும் பிரார்த்தனைகளிலும் தவத்தின் வலிமையினாலும் மிகவும் எளிதாக அவரே வியக்கும் படி தன் இலட்சியத்தினை எட்டினார்.

அவர் என்னிடம் உரையாடும்பொழுதெல்லாம் நான் அவருக்குக் கொடுக்கும் ஒரே மருந்து உற்சாகமும் தன்னம்பிக்கையும் மட்டுமே.

நிகழ்வுகள் எல்லாமே எதிர்மறையாக நிகழ்ந்து கொண்டிருந்தபொழுது சிவாவே தன்னம்பிக்கை இழந்தபொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது......!

நிகழ்வுகளை மாற்றிட இயலுமா....? நம் இலட்சியத்தினை அடைவது எப்படி...? என என்னுடன் மனவருத்தத்துடன் உரையாடியபொழுது ,

'கவலையைவிடுங்கள்.... மிக எளிதாக உங்களுடைய பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம்...' எனக் கூறி மன ஒத்திகை என்ற மனப்பயிற்சியை சொல்லிக் கொடுத்தேன்.

என் மீது வைத்திருக்கும் மதிப்பின் காரணமாகத் தட்டமுடியாமல் நான் சொல்லிக் கொடுத்ததை பயிற்சி செய்ய ஆரம்பித்திருந்தார்.

இறுதியில் அவருடைய ஆராய்ச்சி ஏற்கப்பட்டது. இறுதி Demo and Vivo மட்டுமே. அதில் அந்த External Examiner ஓகே சொன்னால் எல்லாம் முடிந்துவிடும். அப்பொழுது மிகவும் படபடப்புடன் இருந்தார். ஏழு வருட உழைப்பு. ஒரே ஒரு நொடியில் ரிஜக்ட் செய்யப்பட்டால்....?

'சிவா, எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். சப்ஜெக்ட்டை மட்டும் ஸ்ட்ராங்காக்கி... Vivo வை ஒரு கிரிக்கெட் களனாக நினைத்து வரக்கூடிய ஒவ்வொரு பந்தினையும் (இங்கே கேள்விகள்.... ) சிக்ஸர் ஃபோருமாய் அடித்து விளாசுங்கள்.... நான் என்னுடைய MS ல்Electronicsல் சிக்ஸர் & ஃபோர் அடித்தது போல்..(நான் என் தவமும் அனுபவங்களும் தொடரில் குறிப்பிட்டிருந்தேன்... ).... டெண்டல்கர் பந்தினை தன்னம்பிக்கையுடன் அடித்து விரட்டுவதைப் போல் நீங்கள் ஒவ்வொரு வினாக்களையும் அதே போல் மன ஒத்திகை செய்யவும்....'


ஏறக்குறைய 3 நாட்கள்தான் இருந்தன. மன ஒத்திகை உடனே நிகழ்ந்துவிடுவதில்லை. அதற்கு கால அவகாசம் தேவை.... காய் கனிந்து கனியாக மாறுவதினைப் போல். எனவே ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த ஒத்திகையினை செய்யும் படிக் கேட்டுக்கொண்டேன்.

வைவா....

கேள்விக்கணைகள் பறக்க..... வந்த வேகத்திலேயே நின்று நிதானமாக ஒவ்வொரு வினாவினையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்குமாய் சிவாவினால் அனுப்பிவைக்க முடிந்தது.

அந்த External Examiner ரே மிகவும் வியந்து போய் பாராட்டினார். சிவாவின் கட்டுரைகள் சில இங்கே அமெரிக்க சஞ்சிகைகளிலும்கூட வெளியானது (அவரது துறை சஞ்சிகைகளில்).

Convocationனும் நல்ல படியாய் முடிந்தது.... ஐஐடியின் இயக்குனர் கையினால் பட்டம் பெற்ற அந்த நாள் நானே அந்த பிஹெச்டியை வாங்கியது போலிருந்தது.... இத்துடன் புகைப்படத்தினை இணைத்துள்ளேன்.

--------------------------------------------------------------------------

நிகழ்வு இரண்டு:

அமரா என்றொரு சிறுமி; சென்னை அண்ணாநகரில் ஒரு கலாசாலையில் பத்தாம் வகுப்புப் பயிலும் ஒரு மாணவி.

இவர் நான் எழுதும் மனோதத்துவக் கட்டுரைகளுக்கு பரம விசிறி.

சமீபத்தில் 483/500 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் 7-வது இடத்தினையும் மாவட்ட அளவில் 3-வது இடத்தினையும் பெற்று பெருமை தேடித்தந்தார்.

இவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. நான் நடத்தும் ஆன்லைன் தவக்கூட்டங்களில் அவ்வப்பொழுது கலந்து கொள்வார். மாநில அளவில் ரேங்க் எடுப்பதற்கு, 'தவம் எப்படி உதவும்...?' என்று கேட்பார்.... கூட்டுத் தவத்தில் அவருடைய குறிக்கோளும் வைக்கப்பட்டது.

அவருக்கும் கீழ்க்கண்ட மன ஒத்திகைப் பயிற்சியைச் சொல்லிக்கொடுத்தேன். ( அதே உபாயத்தினை நம் நிலாரசிகனுக்கும் ஒரு முறை சாகித்திய அகாடமி விருது வாங்குவதாக நம் முத்தமிழில் எழுதியுள்ளேன்.)

ஒரு மிகப்பெரிய ஆடிட்டோரியம். முழுதும் குளிரூட்டப்பட்டிருக்கின்றது. அங்கே மிகப்பெரிய மனிதர்களனைரும் வருகை. மெல்லிய நறுமணமும் சில்லென்ற ஏசியின் குளுமையும் தாக்குகின்றது. அமரா இறுதி வரிசையில் அமர்ந்திருக்கின்றார்.

மேடையில் அப்துல் கலாம். பள்ளியிறுதித் (SSLC)தேர்வில் ரேங்க் வாங்கியவர்களின் பெயரை அறிவிக்கின்றார்.

'அமரா' என்ற பெயர் கலாமின் வாயிலிருந்து உதிர்கின்றது.

மீண்டும் ஒருமுறை உறுதியுடன் கலாம் 'அமரா' என்ற பெயரினை உச்சரிக்கின்றார்.

அமராவிற்கோ ஒரே ஆச்சர்யம்...!

பார்வையாளர்களும் சிறப்பு விருந்தினர்களும் விண்ணைப் பிளக்கும் கரகோஷங்களை எழுப்புகின்றனர்.

அந்த அறை முழுதும் நேர்மறை ஆற்றலால் (Positive Energy) நிரம்பி வழிகின்றது....!

மேடையை நோக்கி நகர்கின்றார் அமரா....

முதல் வரிசையில் பெற்றோர்களும் உறவினர்களும் நண்பர்களும்....!

மேடையின் மேலேற படிக்கட்டுக்கள்.

ஒவ்வொன்றாக.... ஒவ்வொரு படிக்கல்லாகக் கடந்து மேடையினை அடைகின்றார்....

இப்பொழுது மேடை ஏறிவிட்டார்.

முன் வரிசையில் பெற்றோர்களைப் பார்வையிடுகின்றார்.

கண்களில் திவலைகள்....

அவர்கள் செய்த பல தியாகங்களுக்குத் தன்னால், 'என்ன கைமாறு செய்துவிட முடியும்....?' என கண்களில் மகிழ்ச்சிப் பிரவாகம்.....!!!!

பெற்றோர்களுக்கும் தன் மகளின் சாதனை கண்டு கண்களில் பனிக்கின்றது நீர்த் திவலைகள்.....! எதையோ சொல்ல நினைக்கின்றனர். வார்த்தைகள் வரவில்லை...!

கலாம் தன் காந்தச் சிரிப்பில் அமராவை அழைக்கின்றார்.

அமரா கலாம் அருகில் நகர்கின்றார்..... கண்கள் பனிக்கின்றது....

'இதெல்லாம் கனவோ...?' என ஆச்சர்யத்தில் லயிக்கின்றார்....! இறைவனுக்கு இதயப் பூர்வமாய் நன்றி தெரிவிக்கின்றார்....!

பள்ளியிறுதித் தேர்வில் (SSLC) மாநிலத்தில் முதலிடம் வந்ததற்காக கலாம் முதல் பரிசினை அமராவிடம் அன்பளிக்கின்றார்....!

அமரா பரிசினைப் பெற்றுக்கொண்டு மகிழ்கின்றார்....! கலாமின் வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் மனப்பூர்வமாய் கிடைக்கப் பெறுகின்றார்.

அந்த மகிழ்வானது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரை ஒவ்வொரு செல்லினுள்ளும் புறமும் ஊடுருவிச் செல்வதனை அமராவால் உணரமுடிகின்றது....

தொலைக்காட்சி, செய்தித்தாட்கள் மற்ற ஊடகங்கள் அமராவினை பேட்டி எடுக்கின்றன. மகிழ்ச்சியாகயும் அடக்கமாகவும் பேட்டி தருகின்றார் அமரா....

இந்த ஒத்திகையை அடிக்கடி நிகழ்த்துமாறு கூறிட்டேன்.

சமீபத்தில் அவர் மாவட்ட அளவில் 3-வது இடத்தினையும் மாநில அளவில் 7-வது இடத்தினையும் பெற்று அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

சென்ற ஞாயிறன்று (1-ஜூன் -2008) தினகரன், தினத்தந்தி போன்ற நாளேடுகளிலும் அவரது புகைப்படத்தினை வெளியிட்டுருந்தனர்.

ஒரு வார காலம் அவர் தொடர்ந்து என்னுடன் சாட்டிக்கொண்டிருக்கின்றார் மகிழ்ச்சியின் காரணத்தினால்.

நான் இந்தியா வரும்பொழுது கண்டிப்பாக அவரது இல்லத்திற்கு வருகை புரிய வேண்டும் என மிகவும் அன்பாகக் கட்டளையிட்டு அழைத்திருக்கின்றார்.

அன்பிற்குத்தான் எத்தனை வலிமை....!!!!!!